Thiruppugazh கடிமா மலர்க்குள் kadimAmalarkkuL

கடிமா மலர்க்குள் (சுவாமிமலை)

சுவாமிநாதா!
உடலை விட்டு உயிர் பிரியும் முன்,
அடியேன் பாடலுக்கு இரங்கி என் முன் வந்து அருளவேண்டும்.


கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
தருமா கடப்ப மைந்த ...... தொடைமாலை

கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
கருணா கரப்ர சண்ட ...... கதிர்வேலா

வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
முடியான துற்று கந்து ...... பணிவோனே

வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
மலர்வாயி லக்க ணங்க ...... ளியல்போதி

அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
னருளால ளிக்கு கந்த ...... பெரியோனே

அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்த
ணருளே தழைத்து கந்து ...... வரவேணும்

செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
படிதான லக்க ணிங்க ...... ணுறலாமோ

திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

கடிமா மலர்க்குள் இன்பம் உளவேரி கக்கு நண்பு
தருமா கடப்பு அமைந்த ...... தொடைமாலை,

கன மேரு ஒத்திடும் பனிரு மா புயத்து அணிந்த
கருணாகர! ப்ரசண்ட ...... கதிர்வேலா!

வடிவார் குறத்தி தன்பொன் அடிமீது நித்தமும் தண்
முடியானது உற்று உகந்து ...... பணிவோனே!

வளவாய்மை சொல் ப்ரபந்தம் உள கீரனுக்கு உகந்து,
மலர்வாய் இலக்கணங்கள் ...... இயல்பு ஓதி,

அடிமோனை சொற்கு இணங்க, "உலகாம் உவப்ப" என்று,உன்
அருளால் அளிக்கு கந்த! ...... பெரியோனே!

அடியேன் உரைத்த புன்சொல் அது மீது நித்தமும் தண்
அருளே தழைத்து உகந்து ...... வரவேணும்.

செடிநேர் உடல் குடம்பை தனில் மேவி உற்று, இடிந்த
படிதான் அலக்கண் இங்கண் ...... உறலாமோ?

திறமாதவர்க் கனிந்து உன் இருபாத பத்மம்
உய்ந்த
திருவேரகத்து அமர்ந்த ...... பெருமாளே.

Comments