Thiruppugazh #174 irulum orkadhir

இருளும் ஓர்கதிரணு  (சிதம்பரம்)

சிதம்பர முருகா!
சிவானந்தத்தில் அடியேன் திளைத்திருக்க அருள்.


இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ 
னிடம தேறியெ ...... னிருநோயும்

எரிய வேமல மொழிய வேசுட
ரிலகு மூலக ...... வொளிமேவி

அருவி பாயஇ னமுத மூறவுன்
அருளெ லாமென ...... தளவாக

அருளி யேசிவ மகிழ வேபெற
அருளி யேயிணை ...... யடிதாராய்

பரம தேசிகர் குருவி லாதவர்
பரவை வான்மதி ...... தவழ்வேணிப்

பவள மேனியர் எனது தாதையர்
பரம ராசியர் ...... அருள்பாலா

மருவி நாயெனை யடிமை யாமென
மகிழ்மெய் ஞானமு ...... மருள்வோனே

மறைகு லாவிய புலியுர் வாழ்குற
மகள்மெ லாசைகொள் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

இருளும் ஓர் கதிர் அணுக ஒணாத, பொன்
இடம் அது ஏறி, என்..... இருநோயும்

எரியவே, மலம் ஒழியவே, சுடர்
இலகும் மூலக ...... ஒளிமேவி,

அருவி பாய, இன் அமுதம் ஊற, உன்
அருள் எலாம் எனது ...... அளவுஆக

அருளியே, சிவம் மகிழவே பெற
அருளியே, இணை ...... அடிதாராய்.

பரம தேசிகர், குரு இலாதவர்,
பரவை வான்மதி ...... தவழ்வேணிப்

பவள மேனியர், எனது தாதையர்,
பரம ராசியர் ...... அருள்பாலா!

மருவி நாய்எனை அடிமை ஆம் என,
மகிழ்மெய் ஞானமும் ...... அருள்வோனே!

மறை குலாவிய புலியுர் வாழ், குற-
மகள் மெல் ஆசைகொள் ...... பெருமாளே.

Comments